இரட்டை வேலை முறையால் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு புதிய சிக்கல்

இரட்டை வேலை முறையால் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு புதிய சிக்கல்
X

சாப்ட்வேர் பணி. கோப்பு படம்.

ஊழியர்களின் இரட்டை வேலைமுறையால் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் என்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பாக பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வழங்குவது சாப்ட்வேர் நிறுவனங்கள் தான். இந்தியாவை பொறுத்தவரை டிசிஎஸ், ஐபிஎம், இன்போசிஸ், சிடிஎஸ், விப்ரோ, சோகோ போன்ற சாப்வேர் நிறுவனங்களில் எப்படியாவது வேலைக்கு சேந்துவிட வேண்டும் என்பதுதான் இளைஞர்களின் கனவாக உள்ளது. இந்த நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுப்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களின் வெளிநாட்டு கனவு இந்த நிறுவனங்களில் வேலை கிடைப்பதன் மூலம் நிறைவேறுகிறது. சென்னை, கோவை, பெங்களூர், ஐதராபாத் , புனே என்று இந்தியாவின் பல நகரங்களில் நேரடியாக சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வந்தனர். கொரனா காரணமாக கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாக சாப்ட்வேர் ஊழியர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில், வீடுகளில் இருந்து கொண்டே பணியாற்றி வருகிறார்கள்.

நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பில் இருந்து விலகி வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டத்தால் சாப்ட்வேர் ஊழியர்களிடம் இரட்டை வேலை என்ற புதிய முறை உருவாகி உள்ளது. கொரனா காலத்தில் ஏற்பட்ட இந்த முறையை மூன்லைட்டிங் என்று குறிப்பிடுகிறார்கள். இதன்படி சாப்ட்வேர் ஊழியர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் தவிர கூடுதலாக மற்றொறு நிறுவனத்திலும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். கூடுதல் வருவாய்க்காக அவர்கள் இப்படி செய்யத்தொடங்கி உள்ளனர். இந்த மூன்லைட்டிங் முறைதான் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு இப்போது பெரிய தலைவலியையும், சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளன. திறமையான ஊழியர்களை விட்டுவிடாமல் தக்கவைத்து கொள்வதிலும், உற்பத்தி அளவு குறையாமல் பார்த்து கொள்வதில் தான் ஐடி துறையில் தற்போது ஒரு பெரிய கவலையாக நிறுவனங்களுக்கு உள்ளது.

இரட்டை வேலை முறையில் ஒரு ஊழியர் வழக்கமாக தான் நிலையாக வேலைபார்க்கும் நிறுவனத்தில் காலை 9 மணிமுதல் மாலை 6மணி வரை பணி செய்து விட்டு கூடுதலாக வேறு ஒரு நிறுவனத்திற்கு அதற்குப் பிறகு வேலை பார்ப்பார்கள். இரவு நேரங்களில் தான் இந்த வேலைகளை பொதுவாக அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள்.

இந்த இரட்டை வேலை முறையை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பதில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஊழியர்கள் கூடுதல் வருவாய்க்காக இப்படி செய்கிறார்கள் அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சில நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் சில நிறுவனங்கள் இது நியாயமற்றது. இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார்கள். இரட்டை வேலை பார்த்ததுக்காக விப்ரோ நிறுவனம் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கடுமையாக எச்சரித்துள்ளன. சில நிறுவனங்கள் வாரத்திற்கு 3நாட்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளன. ஆனால் டெக் மகேந்திரா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்கள் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கு இது உதவியாக இருக்கிறது, அதனால் இந்த இரட்டை வேலை முறை ஒன்றும் தவறல்ல என்று ஆதரிக்கிறார்கள். இந்த இரட்டை வேலை முறையை எந்த சட்டம் தடுக்கவில்லை. வேலைவாய்ப்பு சட்டங்களில் எந்த சட்டத்தின் கீழும் இதை தடுக்க விதிமுறை ஏதும் வரையறுக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் இரட்டை வேலை முறையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் சில மாநிலங்களில் ஐடி நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று உள்ளது.

இந்த இரட்டை வேலை முறையால் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு பல்வேறு ஆபத்துகள் காத்திருக்கின்றன. ஒருநிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வர்த்தக ரகசியம் மற்ற நிறுவனங்களுக்கு தெரிய வாய்ப்பு, இரண்டு இடங்களில் வேலை பார்ப்பதால் ஊழியர்களின் வேலை திறன் குறைவது, தங்கள் நிறுவனங்களின் வளங்களை ஊழியர்கள் மற்ற நிறுவனத்திற்கு பயன்படுத்தலாம் அதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று சாப்ட்வேர் நிறுவனங்கள் கவலை கொள்கின்றன. அதனால் இந்த பிரச்சனையில் ஊழியர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றி சாப்ட்வேர் நிறுவனங்கள் தீவிர ஆலோசனையில் உள்ளன.

Tags

Next Story
ai tools for education