மூலப்பொருள் விலையேற்றம்: நெருக்கடியை சந்தித்து வரும் இந்திய ஜவுளித்துறை

மூலப்பொருள் விலையேற்றம்: நெருக்கடியை சந்தித்து வரும் இந்திய ஜவுளித்துறை
X
கடந்த ஆண்டு பருத்தியின் விலை ரூ.125 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.280 ஆக உயர்ந்துள்ளது

வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் பருத்தி உற்பத்தியில் 58 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை வழங்குவது ஜவுளித்துறை. ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 4.5 கோடி மக்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தியாவின் ஏற்றுமதியில் ஜவுளித்துறையின் பங்கு 11% ஆக உள்ளது. சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.


கடந்த மாதம் பருத்தியின் விலை வரலாற்றில் இல்லாத உச்சத்தை எட்டியது. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கிலோ பருத்தி ரூ.125 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.280 ஆக உயர்ந்தது.

இதனால் பருத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வரவும், தட்டுப்பாட்டை போக்கவும் பருத்தி இறக்குமதி மீது மத்திய அரசு விதிக்கும் வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி பருத்தி மீதான இறக்குமதி வரியை வருகிற செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதன்மூலம் பருத்தி விலை குறைந்து அதன் விளைவாக நூல் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தான் ஜவுளி உற்பத்தியாளர்கள் உரிய விலை தருவதில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் 45 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி வருகிற மே 16,17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஜவுளித்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் பருத்தி உபரியாக இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், இது போன்ற தட்டுப்பாடும், வரலாறு காணாத விலையேற்றமும் நிலவுகிறது.

18 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாய் இருந்த ஒரு கிலோ நூலின் விலை தற்போது 490 ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட 150% விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆயத்த ஆடைகளின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் பருத்தி ஆடைகளின் விற்பனை பாதியாக குறைந்துள்ளதால், உற்பத்தியும் குறைந்துள்ளது. உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் ஆடைகள் பக்கம் திரும்பி வருகின்றனர்.


ஏன் இந்த விலையேற்றமும் தட்டுப்பாடும்?

இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தியை ஐந்து பெரு நிறுவனங்கள் தான் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. அவர்கள் தான் இந்த செயற்கையான விலையேற்றத்திற்கு காரணம்.

இந்திய பருத்தி கழகம் பருத்தியின் விலை, அடிப்படை ஆதார விலையை விட குறையும்போது விவசாயிகளிடம் ஆதார விலைக்கு கொள்முதல் செய்யும். ஆனால் இந்திய பருத்தி கழகமும் பருத்தியை கொள்முதல் செய்து பெரு நிறுவனங்களுக்கு தான் விற்பனை செய்கின்றன.

இறக்குமதி செய்யப்படும் பருத்தியையும் இந்த பெரு நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. இதனால் இறக்குமதி வரியையும் ரத்து செய்தும் விலை குறையாமல் அதிகரித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு பருத்தி அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பருத்தி அத்தியாவசிய பட்டியலில் இருந்தவரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பருத்தி கைவசம் இருப்பு உள்ளது என்பதை அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அத்தியாவசிய பட்டியலில் இருந்து பருத்தியை நீக்கிய பிறகு பதுக்கல் அதிகரித்துவிட்டது.

ஏற்கனவே ஜவுளி நிறுவனங்களில் 50% உற்பத்தி தான் நடைபெற்று வருகிறது. தற்போதைய விலையேற்றத்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கும். இறக்குமதி வரியை ரத்து செய்தால் பருத்தி மற்றும் நூல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தான் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.`

இதனால் ஜவுளி தொழில் அமைப்புகள் மத்திய அரசிடம், பருத்தி மற்றும் நூலை மீண்டும் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு, நூல் போன்ற முக்கிய மூலப் பொருட்களை உள்நாட்டு தேவைக்கு போக மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக வருகிற மே 16 முதல் மே 21 வரை திருப்பூர் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசு இறக்குமதி வரியை ரத்து செய்தாலும் இறக்குமதி செய்யப்படும் பருத்தி சந்தைக்கு வருவதற்கு இரண்டு, மூன்று மாதங்கள் ஆகிவிடும். அப்போது தான் அதன் தாக்கம் தெரியவரும்.

பருத்தி உற்பத்தி, இருப்பு தொடர்பான ஆதாரப்பூர்வமான தரவுகள் இல்லை. அதனால் தான் இத்தகைய ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. மத்திய அரசு தரவுகளை தெளிவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது இருமுனை கொண்ட கத்தி போன்றது. அதனால் பாதகமான விளைவுகளும் ஏற்படும். பருத்தி வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தான் விலை நிர்ணயத்தில் இத்தகைய குளறுபடிகள் நிலவுகின்றன.

நூல் விலை உயர்வு ஜவுளி உற்பத்தியாளர்களை பாதித்துள்ளது என்றாலும், தற்போதைய சூழ்நிலையை அனைத்து தரப்பும் இணைந்து கவனமாக கையாள வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!