திண்டுக்கல் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.1000 ஆக உயர்வு

திண்டுக்கல் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.1000 ஆக உயர்வு
X
திண்டுக்கல் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.1000 ஆக உயர்ந்து உள்ளது.

திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, வெள்ளோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லிகை, கோழிக் கொண்டை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்கள் வரத்தைப் பொறுத்து நாள்தோறும் விலைகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம் வருமாறு:-

மல்லிகை பூ - ஒரு கிலோ ரூ. 1000, முல்லை பூ ரூ. 500, கனகாம்பரம் ரூ.400, ஜாதிப் பூ ரூ. 400, சம்பங்கி ரூ. 250, கோழி கொண்டை ரூ. 80, செண்டு மல்லி ரூ. 80, ரோஸ் ரூ. 150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூ விவசாயம் நடைபெறும் பகுதிகளில் மழை இல்லாததால் பூக்கள் வரத்து குறைந்துள்ளதாகவும், திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 30 டன் பூக்கள் மட்டுமே வரத்து வந்துள்ளது. மேலும் நாளை ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு குல தெய்வம் மற்றும் கோவில் விழாக்கள் நடைபெறுவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.கடந்த வாரத்தை விட இன்று பூக்கள் விலை 2 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ஆகிய பகுதிகளில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மலர் சந்தையில் இருந்து அதிக அளவில் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிக அளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நிலக்கோட்டை மலர் சந்தை என்பது தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மலர் சந்தைகளில் ஒன்றாகும். இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கு 18 விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் வரத்து வெகுவாக உயர்ந்துள்ளது. பூக்களை கொள்முதல் செய்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மலர் சந்தை பகுதியில் குவிந்தனர்.

நிலக்கோட்டை மலர் சந்தையை பொறுத்தமட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக மல்லிகை கிலோவிற்கு ரூ.250 முதல் 300 வரை விற்பனையானது. இன்று ஒரே நாளில் கிலோ மல்லிகை பூ ரூ.850 முதல் ரூ.900 வரை விற்பனையானது. முல்லை ரூ.450, ஜாதி பூ ரூ.400, சம்பங்கி பூ ரூ.200, கனகாம்பரம் ரூ.350, பட்டன் ரோஸ் ரூ.200, சாதா ரோஸ் ரூ.220, செண்டு மல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு பூக்கள் விற்பனையானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!