தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு ரூ.9 கோடி வருமானம்

தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம்  அரசுக்கு ரூ.9 கோடி வருமானம்
X
சிறப்பு பஸ்கள். கோப்பு படம்.
தீபாவளிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு ரூ.9 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முக்கியமாக சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிக எண்ணிக்கையில் பஸ்கள் விடப்பட்டன. அக்.21, 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் 4,218 சிறப்புப் பஸ்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 6,370 பஸ்கள் என மொத்தம் 10,588 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன. அரசுப் பஸ்களில் சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்ல சுமார் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், பல்வேறு ஊர்களில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் முன்பதிவு செய்து பயணம் செய்தனர்.

அக்.21, 22, 23 ஆகிய நாட்களில் 2 ஆயிரம் ஆம்னி பஸ்களில் பொதுமக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தது.ஆம்னி பஸ்களை மண்டலம்தோறும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் கண்காணித்தன. இவர்கள் ஆம்னி பஸ்களை பல இடங்களில் நிறுத்தி சோதனை செய்தனர். இதானல் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தடுக்கப்பட்டது.

சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து வெளி ஊர்களுக்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.அதனால் பயணிகள் இந்த பேருந்து நிலையங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக இரவும் பகலும் 340 சிறப்புப் பஸ்களை மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்து இருந்தது. தீபாவளிக்கு ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதற்க வசதியாக மீண்டும் 24ந்தேதியில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டன.26ந்தேதிவரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அரசு செய்து இந்த ஏற்பாட்டால் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார்கள். இதனால் பஸ்களில் கடந்த 6 நாட்களாக பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதின் மூலம் அரசுக்கு ரூ.9 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் 2.80 கோடி பயணிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை மூலம் அதிக அளவில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அடுத்து பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை தயார் ஆகி வருகிறது.

Tags

Next Story