வங்கிகள் சிறு தொழில் கடன்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் ரகுபதி பேச்சு

புதுக்கோட்டையில் பெடரல் வங்கி கிளையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
வங்கிகள் சிறு தொழில் கடன் உதவிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி பேசினார்.
புதுக்கோட்டை கீழ ராஜவீதி பிருந்தாவன் கார்னரில் பெடரல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த வங்கி புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெடரல் வங்கி கிளை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெடரல் வங்கியின் கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் அமைச்சர் ரகுபதி பேசுகையில் ‘வங்கி சேவைகள் தற்போது மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டது. இதன் காரணமாகத்தான் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கூட தற்போது வங்கிகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த வங்கிக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வங்கிகள் சிறு, குறுதொழில் கடன் உதவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அதேபோல் ஏழை எளிய மக்கள் ஆடு, கறவை மாடு வாங்குவதற்கு கடன் பெறுவதற்கும் வங்கிகள் கடன் உதவி செய்ய வேண்டும். அதே நேரத்தில் வங்கியில் கடன் உதவி பெற்றவர்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் வங்கிக்கும் அவர்களுடைய சேவைக்கும் பலன் அளிக்கும். அந்த வகையில் பெடரல் வங்கியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது சேவையை தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்’ என்றார்.
வங்கியின் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் லாக்கர் மற்றும் பாதுகாப்பு அறையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா திறந்து வைத்தார். ஏ.டி.எம். சேவையை தொழிலதிபர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவிற்கு பெடரல் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் வருண் முன்னிலை வகித்து சிறப்பு விருந்தினர் அமைச்சர் ரகுபதி மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளும் வழங்கினார்.
விழாவில் பெடரல் வங்கி மேலாளர்கள் ஆரோக்கிய ரீகன் (மதுரை) ,ரவி (காரைக்குடி) , ஆகியோரும் பங்கேற்றார்கள். தொடக்கத்தில் விழாவிற்கு வந்த அனைவரையும் பெடரல் வங்கியின் புதுக்கோட்டை கிளை மேலாளர் மதன்குமார் வரவேற்றார். விழாவில் டாக்டர் ராஜாராமன் உள்பட வாடிக்கையாளர்கள் மற்றும் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu