தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 2 நாளில் ரூ.464 கோடிக்கு மதுவிற்பனை

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 2 நாளில் ரூ.464 கோடிக்கு மதுவிற்பனை
X

டாஸ்மாக் மதுபானக்கடை. கோப்பு படம்.

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 2 நாளில் ரூ.464 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கோரிக்கைகள் இருந்தன. அரசியல் கட்சியினரும் தேர்தல் நேரத்தில் பூரண மதுவிலக்கு என்பதை வாக்குறுதியாக அளித்தனர். ஆனால் இந்த கோரிக்கையை யாரும் இப்போது கண்டுகொள்வது கிடையாது. அரசுக்கு அதிக வருமானம் வருவது மது விற்பனை மூலம் மட்டுமே என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தான் அரசியல் கட்சியினராலும், சமூக ஆர்வலர்களாலும் முன்வைக்கப்படுகின்றன. 2006-ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் மொத்தம் 6,736 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்து வருடத்தில் சிறிது குறைக்கப்பட்டு, 2011-ம் ஆண்டு 6,696 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இருந்தன. 2016-ம் ஆண்டு தொடக்கத்தில், தமிழகத்தில் 6715 டாஸ்மாக் கடைகள் இயங்கின. 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் விபத்துகள் ஏற்பட காரணமாக இருப்பதால் நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும டாஸ்மாக் கடைகளை மூட கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, நகருக்குள் புதிதாக திறக்கப்பட்டன. இதன்படி 2016-2021 காலகட்டத்தில் மட்டும் 1290 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 6,434 டாஸ்மாக் மதுக் கடைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இவைகள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.36,752 கோடி வரை வருமானம் கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது. தனியார் மது ஆலைகளில் இருந்து தமிழ்நாடு வாணிபக் கழகம், மதுவை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்கிறது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக விடுமுறை நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். பண்டிகைக்காலங்களில் இதன் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற காலங்களில் விற்பனை உயர்ந்து இருக்கும். பண்டிகை காலங்களில் மதுபானங்களின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்தாண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனையானது. இதனை முறியடிக்கும் வகையில் இந்த தீபாவளி விற்பனையாக கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.464.21 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

சென்னையில் மட்டும் நேற்று -ரூ. 51.52 கோடிக்கும், திருச்சியில் -ரூ.50.66 கோடிக்கும், சேலத்தில் ரூ.52.36 கோடிக்கும், மதுரையில் ரூ.55.78 கோடிக்கும், கோவையில் - ரூ.48.47 கோடிக்கும் என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனையானது.

நேற்று முன்தினம், சென்னையில் -ரூ.38.64 கோடிக்கும், திருச்சியில் மட்டும் -ரூ.41.36 கோடிக்கும், சேலத்தில்-ரூ.40.82 கோடிக்கும், மதுரையில் ரூ.45.26 கோடிக்கும், கோவையில் ரூ.39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த தீபாவளி விற்பனையை இந்த தீபாவளி முறியடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 464.21கோடி ரூபாயுக்கு மதுவிற்பனை ஆகி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!