தீபாவளிக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை
பட்டாசுகள்.
பட்டாசு என்றதும் சட்டென நினைவுக்கு வருவது சிவகாசி தான். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கிய தொழில் பட்டாசு உற்பத்தி தான். ஆண்டு முழுவதும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நடந்து கொண்டே இருக்கும். இந்தியா முழுவதற்கும் சிவகாசியில் இருந்துதான் விதவிதமான பட்டாசுகள் சப்ளை செய்யப்படுகின்றன. கோவில் திருவிழா, திருமணம், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் என்று அனைத்து விழாக்களுக்கும் பட்டாசு வாங்கப்பட்டாலும் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஒரு ஆண்டு முழுவதும் உ ற்பத்தி செய்யும் பட்டாசுகளை தீபாவளிக்கு மொத்தமாக விற்று தீர்த்து விடுவார்கள். சிவகாசி பகுதிகளில் 1928-ம் ஆண்டு 4 சிறிய ஆலைகளில் தான் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவிலான 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள்.
சிவகாசி தவிர இந்தியாவின் சில பகுதிகளில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும் நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவீம் வரை சிவகாசியில்தான் உற்பத்தியாகின்றன. பொதுவாக ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை வடமாநிலங்களில் நடைபெறும் விழாக்களை கணக்கில் கொண்டு பட்டாசுகள் தயார் செய்யப்படும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீபாவளி பண்டிகையை குறிவைத்து பட்டாசுகளை உற்பத்தி செய்வார்கள். தீபாவளிக்காக மட்டும் புதிய பேன்சிரகப் பட்டாசுகளை தயார் செய்வார்கள். சிவகாசியில் தொடக்க காலத்தில் கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, சக்கரம், சாட்டை போன்ற வெடிக்காத ரக பட்டாசுகள் தான் 100 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது பல வண்ணங்களில் இரவில் பிரகாசமாக ஒளியை உமிழும் விதவிதமான பேன்சி ரகங்கள், வெடிகள் 80 சதவீதத்துக்கும் மேல் தயார் செய்யப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்த வர்த்தகம் பாதியாக குறைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்தான். பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகளை கோர்ட்டு அறிவித்ததுமே பட்டாசு விற்பனை குறையத்தொடங்கி விட்டது. அதிலும் சரவெடிகள் உள்பட சில வெடிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க விதிக்கப்பட்ட கெடுபிடிகள், பசுமை பட்டாசுகள் தயார் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள், சீனப் பட்டாசு வருகை, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பல பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியை குறைத்து விட்டன. அதனால் பட்டாசுகளின் விலை இந்த ஆண்டு சுமார் 40சதவீதம் அளவுக்கு உயர்ந்து விட்டன.அதானல் ஆலை உரிமையாளர்கள் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தியை குறைத்து விட்டனர்.
இந்த நிலையில்தான் சீனப்பட்டாசுகள் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தீபாவளிக்கு சிவகாசியில் தயார் ஆன பட்டாசுகளையே வாங்கி பயன்படுதினர். உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 95சதவீதம் தீபாவளிக்கு விற்பனை ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.150 கோடி அளவுக்கும், தமிழகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது. இந்தியா முழுவதும் தீபாவளிக்கு மட்டும் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக பட்டாசு உற்பத்தி ஆலை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு 5ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தீபாவளிக்கு பட்டாசுகள் விற்னை நடந்துள்ளன. ஆனால் கோர்ட்டு உத்தரவு உள்பட பல்வேறு காரணங்களால் பட்டாசு விற்பனை பாதிக்கும் கீழே குறைந்து விட்டது என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu