தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று
கூடுதலான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் -எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;இந்தியாவில் உருமாற்ற கொரோனா வைரஸ் புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்திலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனா பெருந்தொற்று பரவும் வேகம் மிகுந்த கவலை அளிக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.எனினும் அலையலையாக குவியும் நோயாளிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இன்னபிற தொழில்நுட்ப வல்லுனர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்ற கவலைதரும் செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அரசு மருத்துவர்கள் சங்கங்களும் இதனை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று சிகிச்சையில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் தாங்கள் முற்றிலும் சோர்ந்து போய்விட்டதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருவதை காண முடிகின்றது.இதனால் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் காக்க வைக்கப்படுகின்றனர் அல்லது அனுமதி மறுக்கப்படுகின்றனர். மேலும் குறைவான ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் போர்க்கால அடிப்படையில் விரைவாக நிரப்பப்பட வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று (FMGE) தகுதித் தேர்வினை எழுதி வெற்றி பெற்றவர்களை உடனடியாக (CRRI) இன்டெர்ன்ஷிப் ஆக பணியமர்த்தப்பட வேண்டும்.வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகள் முடித்து அனைத்து விதமான தகுதிகள் இருந்தும் இந்தியாவில் மருத்துவராக தொடர FMGE தகுதித் தேர்வெழுதி வெற்றிபெற வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் காத்திருப்பில் உள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அவர்களை பயன்படுத்திக் கொள்வதே சிறந்ததாக இருக்கும் என்பதால், FMGE தகுதித் தேர்வுக்கு பதில் நேர்முகத் தேர்வு நடத்தி அவர்களைக் கொண்டு நேசனல் ஹெல்த் மிஷன் கீழ் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.அதுமட்டுமின்றி, தன்னார்வலர்களாக பணிபுரிய விரும்பும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பும், போதிய ஊக்கத்தொகையும் வழங்கி, அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும்.மேலும், ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் இன்னபிற ஊழியர்களுக்கு தேவையான வசதிகள் உற்சாகமூட்டும் பயிற்சிகள், ஓய்வு அறைகள் போன்றவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையில் அரசு எடுக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கும் எஸ்டிபிஐ கட்சி துணை இருப்பதோடு மட்டுமல்லாமல் களப்பணியாற்றவும், அனைத்து தரப்பினர் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடர்ந்து செயலாற்றும் என தெரிவித்துக் கொள்வதோடு, கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் அனைத்துவிதமான நடவடிக்கைக்கும் துணை நிற்பது என்பது ஒவ்வொரு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகும் என்பதை கருத்தில்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu