இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? மண்டைய பிய்த்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள்..!

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? மண்டைய பிய்த்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள்..!
X
காண்பவரை கவரும் இந்திய ஜனாதிபதி மாளிகை தோற்றம்.
பரபரப்பான தேசிய அரசியல் சூழலில் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? என்னும் கேள்வி அரசியல் கட்சியினர் அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15ல் துவங்கியது. ஜூன் 29 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்பதால் அதற்குள்ளாக ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை பா.ஜ., வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தவும் சில கட்சிகள் ஒருங்கிணைந்து ஆலோசித்து வருகிறது.

ஆனால், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றிப்பெற தேவையான ஓட்டு எண்ணிக்கை இல்லை. அதாவது எம்எல்ஏ மற்றும் எம்.பி.,க்களின் ஓட்டு மதிப்பானது, அவர்களின் மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் சட்டசபை இடங்களின் எண்ணிக்கையையும் பொறுத்து கணக்கிடப்படும். அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் மொத்த ஓட்டுகளான 10,86,431ல், 50 சதவீதத்திற்கும் மேலாக பெறுவதற்கு தே.ஜ., கூட்டணிக்கு இன்னும் 13 ஆயிரம் ஓட்டுகள் தேவைப்படுகிறது.

அதனால் இதுகுறித்து ஆலோசிக்க ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய 14 பேர் அடங்கிய குழுவை பா.ஜ., நியமித்துள்ளது. இதனால், அடுத்த வாரம் வேட்பாளர் குறித்த அறிவிப்பை பா.ஜ., அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வேட்பாளருக்கு தேவையான ஓட்டு எண்ணிக்கை இல்லை. தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக தேர்வானார்.

ஆனால், இந்த தேர்தலில், டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ், பா.ஜ.,வுக்கு எதிராக கட்சிகளை திரட்டி வருகிறார். இதனால் இடியாப்ப சிக்கலில் பா.ஜ கட்சி சிக்கி தவிக்கிறது. அடுத்த ஜனாதிபதியாக, மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ கை நீட்டி அடையாளம் காட்டுபவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என, அந்த கட்சி பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது.

எது, எப்படியோ அடுத்த ஜனாதிபதி யார்? என்னும் ஒற்றைக்கேள்வி அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது என்பதே உண்மை!

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!