பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் இன்னிக்குத்தான் பிறந்தார்..

பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ்  இன்னிக்குத்தான் பிறந்தார்..
X
பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் பிறந்த தினம்

கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

1841-இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிஸ் சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.

பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்ஸ், ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.

காரல் மார்க்ஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இவர் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார்.

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்ஸ் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா