ஹைப்ரிட் பைக்கிற்கு காப்புரிமை பெற்ற கவாசகி

ஹைப்ரிட் பைக்கிற்கு காப்புரிமை பெற்ற கவாசகி
X
புதிய நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள், உலகின் முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் பைக் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள், உலகின் முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் பைக் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த மாடல் சந்தையில் வெற்றி பெறும் பட்சத்தில், இதே போன்ற மாடல்கள் சந்தையில் அதிகளவில் அறிமுகம் செய்யப்படலாம்.

கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலில் 451சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 எச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட டிராக்சன் மோட்டார் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலின் ஒட்டுமொத்த திறன் 60 எச்.பி. வரை இருக்கும் என்று தெரிகிறது.

இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் வழக்கமான 650சிசி முதல் 700சிசி மோட்டார்சைக்கிளுக்கு இணையான திறன் கொண்டிருக்கும் என்று கவாசகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயல்திறன் ஒருபக்கம் அதிகளவில் இருக்கும் போதும், ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் என்பதால் நின்ஜா 7 ஹைப்ரிட் மாடல் சந்தையில் தற்போது கிடைக்கும் 250சிசி மாடல்கள் வழங்கும் மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலின் செயல்திறன் மற்றும் மைலேஜ் அடிப்படையில் இது சந்தையில் நிச்சயம் வெற்றி பெறும் என்றே தெரிகிறது.

கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலில் அதிக தரமுள்ள டி.எஃப்.டி. டேஷ்போர்டு மற்றும் ரைடாலஜி செயலி, வாக் மோட், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இந்த பைக்கின் முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் இரு டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது புதிய கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!