காரில் இருந்துகொண்டே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதி
காரில் அமர்ந்தவாறே தடுப்பூசி செலுத்திக்கொள்ள புது வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.;
மருத்துவமனைக்குள் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமே என்ற ஒரு தயக்கமே, பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து தாமதப்படுத்தி வருகிறது. இந்தத் தயக்கத்தை சரி செய்யும் வகையில், அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில், தற்காலிகமாக வாகனத்தில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு திரும்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இதன்படி, மருத்துவமனைக்குச் செல்லும் ஒருவர், தனது காரிலிருந்து கீழே இறங்காமலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு, கார்களை நிறுத்த ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு 20 நிமிடம், காரை நிறுத்திவிட்டு, காருக்குள்ளேயே இருக்கலாம். தடுப்பூசி செலுத்தி 20 நிமிடம் வரை எந்த உடல் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, வீட்டுக்கு பாதுகாப்பாகச் செல்லலாம்.