திடீரென டிரெண்டிங் ஆன பெண் சாமியார்... யார் இவர்? என்ன பின்னணி?

கடந்த சில தினங்களாக, 'அன்னப்பூரணி அரசு அம்மா' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பெண் சாமியார் குறித்த செய்திகள் டிரெண்டிங் ஆகி வருகின்றன. இவர் யார், என்ன பின்னணி ? இதோ உங்களுக்காக...

Update: 2021-12-27 06:30 GMT

பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா.

பளபளக்கும் பட்டுப்புடவையில், லிப்டிஸ்க் சகிதம், மலர் மாலை சூடியபடி, பெண் சாமியார் ஒருவரின் படம் தான், சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாபிக். அவர் குறித்த புகைப்படங்கள் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏராளமான பெண்கள், அவரை காண வழி மீது விழி வைத்து காத்திருக்க, திடீரென பக்தர்கள் முன் தோன்றுகிறார்; அவரது 'தரிசனம்' கிடைத்தும், பக்தி பிரவாகத்தில் எங்கள் தாயே , அம்மா என்று முழக்கமிடுகின்றனர். சினிமாவில் வரும் அம்மனை போல் உள்ள அந்த பெண் சாமியாரும் அருள்பாலிக்கிறார்; ஆசி வழங்குகிறார்.

இதுவரை யூ டியூப் மூலம் ஆசி வழங்கி வந்த அன்னபூரணி அரசு  அம்மா, முன்னோட்டமாக, கடந்த 19,ம் தேதி, செங்கல்பட்டு கோவிலந்தாங்கல் பகுதியில் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். முறைப்படி ஆன்மீகத்தில் களமிறங்குவது என்பது, வரும் ஜனவரி முதல் தேதியில்  இருந்து தானாம்.

அதன்படி, அம்மா அன்னபூரணியின் தரிசனம், வரும் ஜனவரி முதல் தேதியில் செங்கல்பட்டில் நடைபெறவுள்ளதாக, அவர் தொடர்பான யூ டியூப் பக்கத்தில் விளம்பரமும் செய்துள்ளனர். அதில்,  ‛அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தியின் அவதாரமே' என்று தலைப்பிட்டு,  ‛அம்மாவின் திவ்ய தரிசனம்' ஜனவரி 1, 2022 அன்று ‛தாயின் பாத கமலங்களில் தஞ்சமடைவோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு கட்டணம் இல்லை;  இலவசம் என்றும் அறிவித்துள்ளனர்.  

பெண் சாமியாரின் புகைப்படங்கள், வீடியோக்கள், அந்த பெண் சாமியாரின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்ப, ஒரே நாளில் பெண் சாமியார், சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகிவிட்டார். இந்த திடீர் பெண் சாமியார் குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்ப, இன்னொரு பக்கம், இவர் யார் என்று சில நெட்டிசன்கள் துருவித் தேடிப்பார்த்து துப்பறிய ஆரம்பித்தனர்.

இதில் கிடைத்த பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க, அவற்றையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, டிரெண்டிங் ஆகியுள்ள பெண் சாமியார், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தங்களது குடும்பப் பிரச்சனைக்காக பஞ்சாயத்துக்கு போனவர் என்று நெட்டிசன்கள், இரு புகைப்படங்களை ஒப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.


அதாவது, 2012-ம் ஆண்டு நவம்பரில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில், சோக முகத்துடன், அரசு என்பவருடன் ஜோடியாக அன்னப்பூரணி என்ற பெண் அமர்ந்துள்ளார். அன்னப்பூரணி, தனது கணவரிடம் விவாகரத்து கேட்டும், அரசுவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறுவதாக அந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. அதே அன்னபூரணிதான், தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில், உருமாறி, ஆதிபராசக்தி அவதாரமாக தன்னை காட்டிக் கொள்வதாக, நெட்டிசன்கள் வீடியோவுடன் பகிர்ந்து வருகின்றனர். 

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக, அன்னபூரணி அரசு அம்மாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை; மவுனம்தான் தொடர்கிறது. விரைவில் நேரில் பக்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள அன்னபூரணி அரசு அம்மாவுக்கு, சில சிக்கல்களும் முளைத்துள்ளன.

கடந்த வாரம் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியது உள்ளிட்ட சில புகார்கள், பெண் சாமியார் தரப்புக்கு தலைவலியாக உள்ளது. எனவே, போலீஸ், வழக்கு என்று பாயலாம் என்றும் பேசப்படுகிறது. எனினும், முறைப்படி புகார் இல்லாததால், அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க போலீசாரும் யோசித்து வருகிறனர்.

மொத்தத்தில், பிறக்கப்போகும் 2022,ம் புத்தாண்டு அன்னபூரணி அரசு அம்மா சாமியாருக்கு சிறப்பாக இருக்குமா? சிக்கலாக இருக்குமா என்பதே அவரை சுற்றியுள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News