இன்ஸ்டாகிராம் நட்பால் மாட்டிய சிறுமி,போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

வீடியோவை இணையத்தில் வெளியிட மிரட்டல், சிறுமி பெற்றோர் புகாரால் குற்றவாளிகள் கைது;

Update: 2025-04-29 08:40 GMT

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக, சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கிஷோர் (22) என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கிஷோர் சிறுமியை வீடியோ கால் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அடிக்கடி வீடியோ கால் செய்த சிறுமியின் காணொளிகளை கிஷோர் பதிவுசெய்து, தனது நண்பர் முகம்மது அலி (22) என்பவரிடம் அனுப்பியுள்ளார். பின்னர், அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி, சிறுமியிடம் தங்களது கோரிக்கைகளை ஏற்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளனர். மேலும், கடந்த 26ம் தேதி, சிறுமியை நேரில் சந்திக்க கிஷோர் மற்றும் முகம்மது அலி ஆகியோர் சேலத்திற்கு வந்துள்ளனர்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர், சேலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பனமரத்துப்பட்டி போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதே நாளில் ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையின் போது இருவரும் போலீசாரால் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் சிறுமியின் வீடியோ கால் பதிவுகளை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதும், சந்திக்க திட்டமிட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிஷோர் மற்றும் முகம்மது அலி இருவரும் போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் அவர்கள் பயணித்த யமஹா மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மொபைல் சாதனங்கள் தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Tags:    

Similar News