சீரற்ற மின்சாரத்தால் ஓட்டு வீட்டில் தீ விபத்து
மின் ஒயர் விபரீதத்தால் மூன்று வீடுகளில் உள்ள கம்பிகள் கருகிய நிலையில் இருந்தது;

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள மோகன் குமாரமங்கலம் வீதியில், சுந்தர்ராஜன் என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீட்டில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை 11:45 மணியளவில், சீரற்ற மின்சாரம் காரணமாக வீடு முழுவதும் தீப்பற்றியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வேகமாக பரவி வீட்டு மேற்கூரை, பீரோவில் இருந்த நகைகள், பணம், துணிகள், மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீப்பற்றின, உடனடியாக தகவல் அறிந்து , ஈரோடு தீயணைப்பு துறையினர் அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மின் ஒயர் விபரீதமாக சூடாகி சரவணனின் வீட்டருகே உள்ள மூன்று வீடுகளிலும் கம்பிகள் கருகியதாகவும் தெரியவந்துள்ளது.
சீரற்ற மின் விநியோகம் மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மின்விநியோகத்துறை நடவடிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.