ஆட்டை கொன்ற மர்ம விலங்கு
மர்ம விலங்கு ஆட்டை கொன்ற சம்பவம்,அப்பகுதி மக்களிடம் பெரும் பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது;
டீ.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியின் குண்டேரிப்பள்ளம் அணை அருகே அமைந்துள்ள வினோபா நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அவர், வழக்கம்போல் அண்மையில் தனது ஆடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றார். மேய்ச்சல் முடிந்த பின், ஆடுகளை பட்டிக்குள் அடைத்துவிட்டு வீடு திரும்பினார்.
அடுத்த நாள் காலை, பட்டிக்குச் சென்றபோது ஒரு ஆடு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இன்னொரு ஆடு காணாமல் போனது. உடனடியாக தகவலறிந்த டி.என்.பாளையம் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் வந்தடைந்து, மர்ம விலங்கு தாக்கிய சாத்தியக்கூறுகளை முன்வைத்து, விலங்கு கால்தடங்களைப் பெற்றிட ஆய்வு நடத்தினர்.
கடந்த இரண்டு வாரங்களாகவே வினோபா நகர் மற்றும் கொங்கர்பாளையம் பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகார்கள் அளித்திருந்தனர். இந்நிலையில் மர்ம விலங்கு ஆட்டை கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.