7.43 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வர் புதிய திட்டங்கள் தொடக்கம்
முதல்வர் அவர்கள், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம், சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டடங்களை நேற்று திறந்து வைத்தார்;
சேலம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம், சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டடங்களை நேற்று திறந்து வைத்தார். இதில், பள்ளி கல்வித்துறையின் பொதுநூலக இயக்கம் மூலம் ரூ.5.46 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 21 நூலக கட்டடங்கள், மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ரூ.1.97 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் மக்கள்பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
இந்த விழாவில், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி பங்கேற்று, பனைமரத்துப்பட்டி, பள்ளிதெருப்பட்டி மற்றும் சூரமங்கலம் முழுநேர நூலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தார்.
சூரமங்கலம், இளம்பிள்ளை, ஏத்தாப்பூர், தேவூர், வாழப்பாடி, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டன. மேலும், கெங்கவல்லி, பனைமரத்துப்பட்டி, வாழப்பாடி ஒன்றிய பகுதிகளில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டடங்களும் திறக்கப்பட்டன.
நிகழ்வில் சேலம் ஆர்.டி.ஓ அபிநயா, மாவட்ட நூலக அலுவலர் விஜயகுமார், தாசில்தார் பார்த்தசாரதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.