கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!
இவ்விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் மற்றும் காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.;
கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் இன்று காலை ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவில், முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷித் ஆகிய ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த துயரகரமான சம்பவத்தைக் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
முதலமைச்சர், மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டதோடு, கூட்டுறவுத்துறை அமைச்சரை சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு பணிகளை மேற்பார்வையிடச் செய்தார். மேலும், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் மற்றும் காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிதியுதவி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.