கிரிப்டோ கரன்சியில் முதலீடு... கிறுகிறுக்க வைக்கும் 'மாஜி' தங்கமணி
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு என்ற தகவலை விட அவர், சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;
முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர், தங்கமணி. 2016-21 வரையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக பதவி வகித்தார். முன்னதாக, 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
எடப்பாடியின் வலதுகரம்
அதிமுக ஆட்சி காலத்தில், கொங்கு மண்டல அமைச்சர்களில் வேலுமணிக்கு அடுத்தபடியாக தங்கமணி அதிகாரம்மிக்கவராக வலம் வந்தார். இவரது தந்தை பெருமாள் கவுண்டர், தாயார் செல்லம்மாள். 61 வயதான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், பரணிதரன் என்ற மகனும், லதாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். முந்தைய ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக செயல்பட்டார். இதனால், திமுக ஆட்சி மாறியதும் வேலுமணி, தங்கமணி வீடுகளில் கண்டிக்காக ரெய்டு இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், வேலுமணி வீட்டில் சோதனை நடந்த நிலையில், தங்கமணி சலசலப்பின்றியே இருந்துவந்தார்.
இந்த நிலையில்தான், தங்கமணி, தனது பெயரிலும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலமும், 2016 முதல் 2020 வரையிலான பதவிக்காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் சுண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
என்னென்ன பிரிவுகளில் வழக்கு
முதல் தகவல் அறிக்கையில் தங்கமணி முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் தரணிதரன் 2வது குற்றவாளி, மனைவி சாந்தி 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி, 13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act 1988 and uls 13(2) thw 13(1)(b) of the Prevention of Corruption Act 1968 as amendod in 2018 -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை, தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.85 கோடி அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தங்கமணி, அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சியால் விஸ்வரூப சிக்கல்
இதுவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நால்வர் மீது வழங்கு தொடரப்பட்டு சோதனை நடைபெற்ற நிலையில், ஐந்தாவதாக தங்கமணி சிக்கியுள்ளார். இதில் இன்னொரு அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் தகவல், சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருப்பதுதான்.
தங்கமணி பல கோடி ரூபாய்க்கு கிரிப்டோ கரன்சிகள் வாங்கியுள்ளார், அதில் அவர் முதலீடு செய்துள்ளதற்கான கம்ப்யூட்டர் ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், தங்கமணி அதில் முதலீடு செய்துள்ளது, பூதாகரமாக வெடிக்கும் என்று தெரிகிறது.
அதிர்ந்து போன அதிமுகவினர்
தங்கமணி அவரது சொந்த ஊரான, நாமக்கல் பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தம்பாளையம் இல்லத்தில் இருப்பதாகவும், அவர் முன்னிலையில், கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக, அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சிக்கும் தலைவர்கள் பினாமி பெயர்களில் சொத்து வைத்திருப்பது, வெளி மாநிலங்களில் அல்லது வெளி நாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதை மட்டுமே கேள்விப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் புள்ளி ஒருவர், கிரிப்டோ கரன்சியில் தனது சொத்துக்களை முதலீடு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், அதிமுகவினர் மத்தியில் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.