2 கைதிகள் கைது! திருடிய நகைகள் மீட்பு
சேலம் போலீசார் 2 கைதிகளை கைது செய்து, திருடிய நகைகளை வெற்றிகரமாக மீட்டனர்.;
திருடிய நகையை கைதிகளிடமிருந்து மீட்ட போலீசார்
வாழப்பாடி அருகே ஆத்தூர் மல்லியக்கரை அருகேயுள்ள சீலியம்பட்டியைச் சேர்ந்த மணிமேகலை (40) மற்றும் அவரது மகள் கோபிகா (20), கடந்த 13ம் தேதி இரவு மல்லியக்கரையிலிருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி மேஸ்ட்ரோ மொபட்டில் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் சிங்கிபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, பைக்கில் வந்த இருவர் கோபிகா அணிந்திருந்த 1.6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து கோபிகா அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் எல்லையில் ஏற்கனவே சிறையில் இருந்த சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் (21) மற்றும் அவரது உறவினர் யுவராஜ் (25) என்பவர்களே இந்த நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இருவரையும் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களிடம் 1.4 பவுன் தங்க சங்கிலி மீட்டனர். பின்னர், இருவரையும் வாழப்பாடி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் நாமக்கல் சிறையில் அடைத்தனர்.