மீன் வளர்ப்போருக்கு ஒரு வாய்ப்பு
மீன் வளர்ப்போர் மற்றும் விற்பனைக்கான உதவி தொகை வாய்ப்பு கலெக்டர் பிருந்தா அறிக்கை;
மீன் வளர்ப்பு, விற்பனை தொழில் மீனவர், பழங்குடியினருக்கு வாய்ப்பு
சேலம் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயல்படுத்தும் மீன்வள மேம்பாடு திட்டத்தின் கீழ் 'தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான்' திட்டம் 2024 முதல் 2029 வரை ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளதாக சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் மலைவாழ் மீனவ மக்கள், பழங்குடியினர் மற்றும் மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீன் பண்ணை குட்டைகள் வெட்டுதல், மீன்வளர்ப்பு குளம் அமைத்தல், மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைத்தல் மூலம் மீன்பண்ணை குட்டைகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல், மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பு திட்டங்களுக்கு மானியம் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். அலங்கார மீன் வளர்த்தல், கொல்லைப்புற மற்றும் நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல், நீரை மறுசுழற்சி செய்து மீன் வளர்த்தல், ஏரிகளில் கூண்டு வைத்து மீன் வளர்த்தல், குளிர் சேமிப்பு ஆலை, பனிக்கட்டி ஆலை அமைத்தல், குளிர்சாதன பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனம், நேரடி மீன் விற்பனை மையம், சிறிய மீன் தீவிர ஆலை, மீன் விற்பனை அங்காடி அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு 90 சதவீத மானியம் வழங்கப்படும். இத்திட்டம் பாலமலை, கத்திரிப்பட்டி, ஜருகுமலை, தும்பல்பட்டி, செம்மநத்தம், ஆனக்காடு, வெள்ளூர், புலியூர், வாழவந்தி, மாரமங்கலம் பீலக்காடு, கிளையூர், செந்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்பதால், மீனவ சமுதாய மக்கள் மற்றும் பழங்குடியினர் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். விண்ணப்பம் பெற 'உதவி இயக்குனர், மீனவர் நலத்துறை, மேட்டூர் அணை' எனும் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 96773-50979, 89400-00482 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.