மேட்டூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சனை
மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் குடிநீர் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கேள்விகள் எழுப்பப்பட்டன;
'அணை அடிவாரம் நகராட்சி இருந்தும் குடிநீர் முறையாக செல்லாதது அதிருப்தி'
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. சார்பில் நகராட்சி தலைவி சந்திரா தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய 14வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம், "மேட்டூர் நகராட்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தும் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் செல்வதில்லை. மேட்டூர் அணை அடிவாரத்தில் நகராட்சி அமைந்திருந்தும் முறையான குடிநீர் விநியோகம் இல்லாதது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்தார். மேலும் அனைத்து வார்டுகளிலும் பல இடங்களில் தார்ச்சாலைகள் அமைக்கப்படாததால் தேர்தல் வரும் நிலையில் வாக்காளர்களை சந்திப்பதற்கு தயக்கம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த உதவி பொறியாளர் மலர், நகராட்சியின் 30 வார்டுகளில் 153 சாலைகள் அமைக்க கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கப்பட்டால் சாலைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். குடிநீர் பிரச்சனைக்கு பல வீடுகளில் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதே காரணம் என சில கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டி, இந்த மோட்டார்களை அகற்றினால் சீரான குடிநீர் விநியோகம் சாத்தியமாகும் என்று கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் கமிஷனர் நித்யா, தி.மு.க. துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.