குடிநீர் பிரச்சினை,பெண்கள் சாலை மறியல்
மகுடஞ்சாவடி பகுதியில் குடிநீர் பற்றாகுறைகாரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்;
சீராக குடிநீர் வழங்காததால் பெண்கள் சாலை மறியல்
மகுடஞ்சாவடி ஊராட்சியின் 5-வது மற்றும் 6-வது வார்டுகளுக்கு உட்பட்ட குப்பாண்டிபாளையம், மரகதம் நகர், மேட்டுக்காடு, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி குடிநீர் மட்டுமின்றி ஆழ்துளை குழாய் தண்ணீரும் சீராக வழங்கப்படவில்லை.
குடிநீர் பிரச்சனை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் மகுடஞ்சாவடி-இடைப்பாடி பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் ஏராளமான பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) சின்னுசாமி ஆகியோர் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பெண்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தச் சாலை மறியல் சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.