தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் 9.63% உயர்வு
முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளில் தமிழக வளர்ச்சி வெற்றிக்குப் பாராட்டு;
"பொருளாதார ரீதியாக தமிழகம் 9.63 சதவீதம் உயர்ந்துள்ளது"
சேலம் தொங்கும் பூங்காவில் தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டம் சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகர் செயலர் ரகுபதி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தனது உரையில், "பெண்களுக்கு விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவியருக்கு வழங்குவதுபோல், மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களால் பொருளாதார ரீதியாக தமிழகம் 9.63 சதவீதம் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "மக்கள் பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் முதல்வருக்கு நாமும் உறுதியாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தேர்தல் பொறுப்பாளர்கள் இளங்கோவன், சுகவனம், மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.