காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
சேந்தமங்கலம் அருகே கடந்த 10 நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால் மக்கள் கடும் அவதி;
சீரான குடிநீர் வழங்க கோரி மறியல் போராட்ட முயற்சி
சேந்தமங்கலம் அருகே உள்ள சிவியாம்பளையம் பஞ்சாயத்தில் அம்மன் நகரைச் சேர்ந்த மக்கள், கடந்த 10 நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலைமைக்கெதிராக தங்கள் கோரிக்கையை காலி குடங்களுடன் கோரிக்கை தெரிவிக்க, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களை கையில் பிடித்து, கொண்டமநாய்க்கன்பட்டி மேடு அருகே சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இந்த அம்மன் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நீண்ட நாட்களாக குடிநீர் இல்லாமல் தவித்த மக்கள், தங்களின் கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த போராட்ட முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவத்தறிந்து நேரில் வந்த சேந்தமங்கலம் போலீசார், மக்களை அமைதிப்படுத்தி சமாதானம் பேசினர். அதன்பின், குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் அனிதா மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி பிரபாகரன் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களுடன் பேசினர். குடிநீர் விநியோக பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மற்றும் தொடர்ச்சியான குடிநீர் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, மக்கள் அதிகாரிகளின் உறுதியை ஏற்று அமைதியாகக் கலைந்து சென்றனர்.