மக்கள் கோரிக்கை நிறைவேறியது – துலுக்கனுாரில் புதிய மேம்பாலம்
நபார்டு நிதி உதவி , ஆத்தூரில் மேம்பாலக் கனவு ஆரம்பம்;
உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்
ஆத்தூர் அருகே துலுக்கனூர் - ஒட்டம்பாறை சாலை வழியாகச் செல்லும் வசிஷ்ட நதியின் குறுக்கே இதுவரை பாலம் வசதி இல்லாததால், பொதுமக்கள் தடுப்பணை கரை வழியாகவே சென்று வந்துள்ளனர். மேலும், மயானப் பகுதிக்குச் செல்வதற்கு ஆற்று நீரில் இறங்கி செல்லும் அவல நிலையும் நிலவி வந்தது. இந்த சிரமங்களைக் களைய அப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் களஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், நபார்டு நிதி உதவித் திட்டத்தின் கீழ் 3.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த மேம்பாலப் பணியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, துலுக்கனூர் வசிஷ்ட நதிப் பகுதியில் பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை அட்மா குழுத் தலைவர் செழியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்களான சேகர், அய்யாக்கண்ணு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.