வெளியூர் தொழிலாளர்கள் கண்காணிப்பு – சென்னிமலை பகுதியில் போலீசார் தீவிர நடவடிக்கை
சென்னிமலை பகுதியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
சென்னிமலை: சிவகிரி அருகே வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, சென்னிமலை சுற்றியுள்ள கிராமங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இக்கிராமங்களில், வெளியூர் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணி, குச்சி கிழங்கு மற்றும் மஞ்சள் வெட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீட்டுக்கு வீடு சென்று, எந்த ஊர்வாசிகள், எத்தனை நாட்களாக தங்கியுள்ளார்கள், இதற்கு முன் எத்தனை முறை வந்துள்ளனர் என்பதற்கான முழுமையான விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் மொபைல் எண்கள் உள்ளிட்ட தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.
சென்னிமலை பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட போலீசார் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வாகன சோதனைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
போலீஸ் அறிவிப்பு:
பொது மக்கள் தங்களிடம் உள்ள அடையாள ஆவணங்கள் – சுய அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ்களை போலீசாரிடம் வழங்கி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். உங்கள் அருகில் வெளியூர் நபர்கள் சந்தேகமாக தங்கியிருந்தாலோ, ஏதேனும் குற்றச்சாட்டு அளிக்கும்படி அமைந்தாலோ, உடனடியாக வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷனை (94981 01253) தொடர்புகொண்டு தகவல் தரலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.