'காமட்டா' கலாச்சார திருவிழா
சேலத்தில் மழை வேண்டி 'காமட்டா திருவிழா'மண் சிலையை கரைத்து வழிபாடு;
மழை வேண்டி 'காமட்டா திருவிழா': மண் சிலையை கரைத்து வழிபாடு
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், காட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 'காமட்டா' திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன், கொத்தாம்பாடியில் நடந்த திருவிழாவில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாகச் சென்று வழிபட்டனர். 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமியரும், மணமாகாத இளம்பெண்களும் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வசிஷ்ட நதிக்கு எடுத்துச் சென்று அங்கு அவற்றைக் கரைத்து, மழை பெய்யவும் திருமணத் தடைகள் நீங்கவும் வேண்டி வழிபட்டனர். 'காமன் திருவிழா' என்றும் அழைக்கப்படும் இந்த பாரம்பரிய விழாவில், கிராமத்தில் உள்ள கோவில் அருகே பச்சைப் பந்தல் அமைத்து, மேடையில் களிமண்ணால் ஆண், பெண் உருவங்களில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் வைக்கப்படுகின்றன. விழாவின் முதல் நாள் பூஜைகளும், கும்மி பாடல்களும், நடனங்களும் நடைபெறுகின்றன. இப்படி வழிபட்டால் மழை பொழிவும், மணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.