கிணற்றில் மூழ்கிய 9 வயது மகனை காப்பாற்ற முடியாமல் தவித்த தந்தை
திருப்பூரில், நீந்தத் தெரிந்தும் 9 வயது சிறுவன் புரை ஏறி மூச்சுத்திணறி கிணற்றிலேயே உயிரிழந்தார்;
9 வயது சிறுவன் கிணற்றில் மூச்சுத்திணறி உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் சென்னிமலை அருகே ஒரு கோவில் திருவிழாவுக்காக வந்த குடும்பத்தினரின் மகிழ்ச்சி நேரம், துயரமாக மாறியது.
முத்தூர் அருகே முருகம்பாளையம், வெள்ளியங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் நிதர்சன் (வயது 9), மூன்றாம் வகுப்பு படித்து முடித்திருந்தான். தனது தந்தை தனசேகர் மற்றும் உறவினர் வளர்மதி மகன் மிதுல் (19) ஆகியோருடன், திருவிழா சென்றதையடுத்து, முதலிகாட்டுத்தோட்ட பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் ஆட சென்றனர்.
மூவரும் நீச்சல் தெரிந்தவர்கள் எனினும், நீந்திக்கொண்டிருந்தபோது நிதர்சனுக்கு திடீரென உடல் நிலை மோசமடைந்தது. புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டதைப்பார்த்து, தந்தை தனசேகர் அவனை உடனடியாக கிணற்றில் இருந்து தூக்கி வெளியில் எடுத்து வந்தார்.
விரைவில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.