அகிம்சையே ஆனந்தம் என மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்
ஈரோட்டில், மகாவீர் ஜெயந்தி ஊர்வலத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்;
ஈரோட்டில் வாழும் ஜெயின் சமுதாயத்தினர், சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரரின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மகாவீர் ஜெயந்தியை பெருமிதத்துடன் மற்றும் ஆனந்தமாக கொண்டாடினர். இந்திரா நகரில் உள்ள ஜெயின் கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக சென்று பக்தியுடன் வழிபாடு செய்தனர்.
வழிபாட்டைத் தொடர்ந்து, கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட ஜெயின் சமூகத்தினர், லட்சுமி நாராயண வீதி, காவேரி சாலை, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, மண்டப வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் ஊர்வலம் மீண்டும் இந்திரா நகர் ஜெயின் கோவிலில் நிறைவு பெற்றது. இதில், வட மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஜெயின் சமூகத்தினர் தெரிவித்ததாவது, மகாவீரரின் அகிம்சை, சமத்துவம், சுயாதீன வாழ்வு போன்ற உயர்ந்த கொள்கைகளை மக்களிடம் பரப்பும் நோக்கில் ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும், இவை சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தும் முக்கியமான தத்துவங்களாக உள்ளன என்றும் கூறினர்.