கூட்டுறவு சங்கம் மஞ்சள் விற்பனை மந்தம்

வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு காத்திருக்கும் விவசாயிகள்;

Update: 2025-05-07 09:50 GMT

மஞ்சள் ஏலத்துக்கு இடம் இல்லை: சாலையோரம் காத்திருந்த விவசாயிகள் அவதி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சளுக்கான ஏலம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிக அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏற்கனவே இருப்பதில் புதிய மூட்டைகளை சேமிக்க இடமின்றி விவசாயிகள் சாலையோரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது மஞ்சள் மூட்டைகளை 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வந்து, நேற்று காலை 11 மணிக்கு கூட்டுறவு சங்கத்துக்கு வந்தனர். ஆனால் கடந்த மாதங்களில் ஏற்கனவே 25,000க்கும் மேற்பட்ட மூட்டைகள் குடோன்களில் இருப்பதால், புதிய மூட்டைகளை வைக்க இடமில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனால் விவசாயிகள் சேலம்–சென்னை மற்றும் ஆத்தூர்–பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலைகளில் 1 கி.மீ. நீளத்தில் வாகனங்களுடன் காத்திருந்தனர். மதியம் பெய்த மழையால், மஞ்சளின் மீது தார்பாய்கள் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய சூழ்நிலையில் அவதியடைந்தனர்.

பின்னர், 4 மணி நேரத்திற்கு பிறகு, இடம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் மூட்டைகள் அனுமதிக்கப்பட்டன. கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறுகையில், ஏற்கனவே உள்ள 25,000 மூட்டைகள் வியாபாரிகள் மூலம் அவ்வப்போது எடுத்துச் செல்லப்படுவதாகவும், இடம் குறைவாக உள்ள குடோன்களில் ஏற்கனவே இடமளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், வாகனங்களால் சாலையில் இடையூறாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த நிலையில், எதிர்காலத்தில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News