சேப்டி பின் விழுங்கிய தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
தொழிலாளி தொண்டையில் சிக்கிய சேப்டி பின்னை, ஈரோடு மருத்துவர்கள் 30 நிமிடங்கள் போராடி வெளியே எடுத்தனர்;
சேப்டி பின் விழுங்கிய தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் தொழிலாளி ஒருவர், தனது வேலை முடிந்த பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, கவனக்குறைவால் சேப்டி பினை வாயில் வைத்து விளையாடினார். எதிர்பாராத விதத்தில் அந்த பின் சறுக்கி விழுந்து அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டது. உடனடியாக வலி, சிரமம், மூச்சுத்திணறல் ஆகியவை காரணமாக அவர் துடித்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான சிறப்பு மருத்துவக் குழுவினர் விரைந்து அணுகினர். நிலைமை தீவிரமாக இருந்ததால், எச்சரிக்கையாக நடந்து கொண்டு, சுமார் 30 நிமிடங்கள் தீவிர சிகிச்சை அளித்து, சேப்டி பின்னை தொண்டையிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றினர்.
இந்த சிகிச்சை நேரத்தில் கிடைக்காதிருந்தால் அந்த தொழிலாளியின் உயிர் ஆபத்துக்குள்ளாகியிருக்கும் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.