குடிபோதையில் மாத்திரை வழங்கியதாக நோயாளிகள் குற்றசாட்டு
“சேலத்தில் 45 வயது ஊழியர் மாதேஷ், குடிபோதையில் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கியதாக சர்ச்சை;
சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மருந்து விநியோக மையத்தில், நோயாளிகளுக்கான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் டாக்டர்களின் பரிந்துரைப்படி வழங்கப்படுகின்றன. இந்த மையத்தில் நேற்று பணியாற்றிய கஞ்நசாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (வயது 45) என்பவர், குடிபோதையில் மருந்து விநியோக செய்ததாக புகார் எழுந்தது. மருந்துகள் பெற வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், மாதேஷ் சரியான மாத்திரைகள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியதோடு, அவரது குடிபோதை காரணமாக மருந்து விநியோகத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவித்தனர். சூழ்நிலை கடுமையாக மாறிய நிலையில், அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேசி, நிலைமையை சமாதானமாக்கினர். பின்னர், புகாரின் அடிப்படையில் மாதேஷ் குடிபோதையில் இருந்தாரா என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரின் ரத்தத்தில் மது இருப்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அறிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசார் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான கட்டுப்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அமல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.