நாய் கடித்த ஆடுகளுக்கு ரூ.8.28 லட்சம் இழப்பீடு வழங்கல் தொடக்கம்
நாய் கடியில் உயிரிழந்த கால்நடைகளுக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பிலான இழப்பீட்டுத் தொகையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்;
ஈரோடு:ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த ஒரு ஆண்டுக்குள் 2,000க்கும் அதிகமான ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களின் கடியில் சிக்கி உயிரிழந்துள்ளன. இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் அரசு, ஆடுகளுக்கு ரூ.6,000, கோழிகளுக்கு ரூ.200 மற்றும் மாடுகளுக்கு ரூ.37,500 என்ற வகையில் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட கணக்கெடுப்பு மற்றும் சான்றுகளின் அடிப்படையில், இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் நாய் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. 2024 செப்டம்பர் 1 முதல் 2025 ஜனவரி 25 வரை 34 கால்நடை வளர்ப்போரின் 138 ஆடுகளுக்காக, ஒவ்வொன்றுக்கும் ரூ.6,000 வீதம் மொத்தம் ரூ.8.28 லட்சம் மதிப்பிலான இழப்பீட்டுத் தொகையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். மற்ற கால்நடைகளுக்கான இழப்பீடும் விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.