பாரத மாதா கோயில் என பெயர் சுட்ட பாஜகவினர் வலியுறுத்தல்
பாஜகவின் மாநில துணை தலைவர் ராமலிங்கம் பாரதமாதா கோயில் என பெயர் சூட்ட வேண்டியன பேட்டியில் வலியுறுத்தினார்;
பாரத மாதா கோவில் என பெயர் மாற்றாவிடில் வழக்கு
சேலம்: பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
"தர்மபுரி, பாப்பாரப்பட்டி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரத மாதா கோவில், வழிபாட்டு தலம் அல்ல எனக்கூறி, தமிழக அரசு, 2021 ஆகஸ்ட் 11-ல் பூட்டிவிட்டது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, 2022 ஆகஸ்ட் 11-ல், மத்திய அரசு அரசாணை வெளியிட்டு, நாடு முழுதும் தியாகிகள் நினைவிடம் திறக்கப்பட்டது. நாங்கள் பாரத மாதாவுக்கு மரியாதை செலுத்தினோம். தி.மு.க., அரசு, எங்கள் மீது வழக்குப்பதிந்து, நான் உள்பட, 11 பேரை கைது செய்தது.
உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றோம். 'கோவில் பூட்டை உடைத்து விட்டோம். தாழ்ப்பாள் சேதமாகி, 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி, 11 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.
பாரத மாதாவுக்கு நினைவாலயம் என அழைப்பது தவறு. இறந்தவர்களுக்கு தான் நினைவாலயம். அதனால், 'பாரதமாதா கோவில்' என பெயர் மாற்ற வேண்டும். இல்லையெனில் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்வோம்," என ராமலிங்கம் கூறினார்.