மூடப்பட்ட கல்குவாரியில் மீண்டும் கற்கள் வெட்டு – நில உரிமையாளர் மீது புகார்
நள்ளிரவில் அதிகாரிகள் ரெய்டு – கற்கள் வெட்டி எடுத்த வாகனம் பறிமுதல்;
மூடப்பட்ட குவாரியில் கற்கள் வெட்டிய விவகாரம்: நில உரிமையாளர் மீது புகார்
இடைப்பாடி தாலுகா கோணசமுத்திரம் கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கல்குவாரியில் மீண்டும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இடைப்பாடி தாலுகா கோணசமுத்திரம் கிராமத்தில் வேலாயுதகரடு அருகே, வேம்பனேரியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்தக் குவாரியில் வெடி வைத்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் அருகிலுள்ள வீடுகள் மீது கற்கள் விழுவதாக புகார் எழுந்ததையடுத்து, குவாரி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டது.
இந்நிலையில், அதே குவாரியில் மீண்டும் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, கடந்த 11-ம் தேதி நள்ளிரவில் சங்ககிரி வட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) லோகநாயகி, வட்டாட்சியர் (தாசில்தார்) ராஜமாணிக்கம், வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ) அன்பரசி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இடைப்பாடி மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், கற்களை வெட்டி எடுத்து கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததோடு, 10 யூனிட் பாறைகளை உடைத்த நில உரிமையாளரான செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக கொங்கணாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.