பயங்கரவாதி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு சேலத்தில் அஞ்சலி
சேலம் கோட்டை மைதானத்தில் அனைத்து கட்சியினரும் இணைந்து அஞ்சலி செலுத்தினர்;
ஜம்மு - காஷ்மீரில் பலியானோருக்கு அஞ்சலி
சேலம்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 26 பேர் பலியாகினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பலியானவர்களின் படத்திற்கு மலர்கள் தூவி, மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், பா.ம.க., மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், தே.மு.தி.க., மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், த.மா.கா., மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
இதே வேளையில், இந்து முன்னணி சார்பில், நங்கவள்ளியில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. மேற்கு மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரளாக பங்கேற்றனர்.