ஏவுகணை நாயகர் அப்துல் கலாமின் 90வது பிறந்தநாள் இன்று
ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த, மக்களின் மனங்களை வென்ற அப்துல் கலாமின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.;
இராமேஸ்வரத்தில் ஏழை முஸ்லீம் குடும்பத்தில், 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்த அப்துல்கலாம், இராமேஸ்வரத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தார். ஏழ்மைக் குடும்பம் என்பதால், பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில், இயற்பியல் பட்டம் வென்றார். 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை, சென்னை எம்.ஐ.டி-யில் தொடங்கினார். அங்கேயே முதுகலை பட்டமும் பெற்றார்.
கடந்த 1960 இல், டி.ஆர்.டி.ஓ (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இஸ்ரோவில் ஆராய்ச்சியை தொடங்கினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு, பொக்ரான் அணு ஆயுத சோதனையில், மூளையாக இருந்தார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான "பாரத ரத்னா விருது", பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.
தனது பதவி காலத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்தார். முதல் குடிமகன் என்ற பதவி க்கு சிறப்பு சேர்த்து, "மக்களின் ஜனாதிபதி" என்றே அழைக்கப்பட்டார். அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை உள்ளிட்ட நூல்களையும் , அப்துல் கலாம் எழுதியுள்ளார்.
விடா முயற்சி, கடின உழைப்பினால் உச்சம் தொட்டவர். தலைசிறந்த விஞ்ஞானி, சிறந்த ஆசிரியர், தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இளைஞர்களின் கனவு நாயகன், பேச்சாளர், எளிமையானவர், எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவராலும் போற்றத்தக்கவராக திகழ்ந்த அப்துல்கலாம், நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பதில் சந்தேகம் இல்லை.