மொபைல் கம்பம் விழுந்து சேலத்தில் தொழிலாளர் மரணம்
சேலத்தில் குழாய் இணைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர், மொபைல் கம்பம் விழுந்து உயிரிழந்தார்.;
மொபைல் கம்பம் சாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு: மூன்று குழந்தைகள் அனாதையாய் தவிப்பு
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, ஒன்பதாம்பாலி, ராமசாமிக்காட்டை சேர்ந்த பெரியண்ணன் (வயது 30), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி நாகேஸ்வரி கடந்த ஆண்டு கேன்சர் நோயால் உயிரிழந்த நிலையில், தந்தை முத்துசாமியும் சில வருடங்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார். தற்போது அவருக்கு 11, 9, 7 வயதிலான மூன்று பெண் குழந்தைகள் மட்டும் உள்ளனர்.
பெரியண்ணன், மேட்டூர் குடிநீர் திட்டத்தின் கீழ் மணியனூரில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு குழாய் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்றைய தினம் குடம்பக்காடு நெத்திமேடு பகுதியில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணியில், சித்தன் (50) என்பவருடன் குழியில் இறங்கி வெல்டிங் பணியில் ஈடுபட்டார். அப்போது அருகே இருந்த தனியார் மொபைல் நிறுவனம் வைத்திருந்த கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. அதன் கிளாம்ப் பகுதி பெரியண்ணனின் நெஞ்சில் குத்தி, அவர் பலத்த காயமடைந்தார். மீட்கப்பட்ட அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சித்தனுக்கு கால் முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெற்றோர் இருவரையும் இழந்து, பெரியண்ணனின் மூன்று சிறுமிகள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.