வாழப்பாடியில் தார்ச்சாலை பணியின் தர ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி தலைமையில் உள்துறை குழுவினர் நேற்று தார்ச்சாலை பணியின் தரம் ஆய்வு செய்தனர்;
வாழப்பாடியில் தார்ச்சாலை பணியின் தர ஆய்வுசேலம் மாவட்டம் வாழப்பாடி உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024–25ன் கீழ், மின்னாம்பள்ளி முதல் செல்லியம்பாளையம் வரை உள்ள 2.6 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்காக ரூ.2.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுவரை 2 கிலோமீட்டர் பாதை பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சாலை பணியின் தரம் மற்றும் பணிநிலை குறித்து ஆய்வு செய்ய, சென்னை நெடுஞ்சாலைத்துறையின் பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகைச் சேர்ந்த கண்காணிப்பு பொறியாளர் சாந்தி தலைமையிலான உள்துறை தணிக்கை குழுவினர் நேற்று நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள், சாலையின் தரம், தடிமன், அகலம் மற்றும் அளவீடுகளை பிரத்யேக கருவிகள் மூலமாக சரிபார்த்து, பணியின் தரநிலையை மதிப்பீடு செய்தனர்.
இந்த ஆய்வில் சேலம் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் நடராஜன், தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் கதிரேஷ் மற்றும் கட்டுமானம், பராமரிப்பு கோட்ட பொறியாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட முக்கிய பொறியியல் அதிகாரிகள் பங்கேற்று ஆய்வுகளைத் தொகுத்து வழிகாட்டுதல் வழங்கினர். இந்த சாலை பணியினால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மெருகான போக்குவரத்து வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.