குடிநீர் குழாய் உடைந்து வீணாக ஓடிய குடிநீர்
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது;
குழாய் உடைந்து பீறிட்டு காவிரியில் கொட்டிய குடிநீர்
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி கரையோரம், காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையத்தின் மூலம் தினமும், 3 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து சுத்திகரித்து, காடையாம்பட்டி, ஓமலூர், கோனூர் பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர் - தொப்பூர் நெடுஞ்சாலையில் மேட்டூர் அணை உபரி நீர் செல்லும் காவிரி பாலத்தின் மீதுள்ள காடையாம்பட்டி திட்ட குழாயில் நேற்று மாலை, 4:30 மணிக்கு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பினால் குடிநீர் பீறிட்டு வெளியேறி உபரிநீர் வெளியேறும் காவிரி ஆற்றில் கலந்தது.
பவானி - தொப்பூர் நெடுஞ்சாலையிலும் குடிநீர் வெளியேறி வீணானது. சுமார் அரை மணி நேரம் குடிநீர் வெளியேறிய நிலையில், வடிகால் வாரிய அலுவலர்கள் விரைந்து செயல்பட்டு குடிநீர் பாய்வதை நிறுத்தினர். தொடர்ந்து இரவு, 8:00 மணி வரை குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை, 'வெல்டிங்' மூலம் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் குடிநீர் வினியோகம் தொடர்ந்து வழக்கம்போல நடைபெற்றது.