ஸ்ரீவில்லிபுத்தூர் வைகுண்ட ஏகாதசி : மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்தால் மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
108 வைணவ தேசங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் கடந்த 15 ஆம் தேதி முதல் ஆரம்பமானது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினத்தன்று தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக வெளியேறுவார்.
மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பாதிப்புகள் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.