ஸ்ரீவில்லிபுத்தூர் தோட்டத்தில் சந்தன கட்டைகள் பதுக்கல் - வனச்சரக அலுவலர் பணியிடை நீக்கம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பந்தபாறைப் பகுதி. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்புகள் ஏராளமாக உள்ளது, வனத்துறையினர் சோதனை செய்ததில் பல லட்சம் மதிப்புள்ள சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பந்தபாறைப் பகுதி. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்புகள் ஏராளமாக உள்ளது. இதே பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராக பணிபுரியும் ஆரோக்கியசாமி என்பவரின் மனைவிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் சந்தன மரம் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருககு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் மாவட்ட வன உதவி அலுவலர் அல்லிராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்ததில் சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. பல லட்சம் மதிப்புள்ள அந்த சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாவட்ட வன அலுவலர் முகம்மதுசபாப் தலைமையில் ஆரோக்கியராஜிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை குறித்து மாவட்ட வன அதிகாரி முகமதுசபாப் இடம் கேட்டபோது, "விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மேலும் புலன் விசாரணை நடத்த மாவட்ட உதவி வனத்துறை அதிகாரி அல்லிராஜ் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது, இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்" என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே 350 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட தோட்டத்தின் உரிமையாளரான கலைவாணியின் கணவர் வனச்சரக அதிகாரியாக உள்ளதால் விசாரணையில் தோய்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தின் இயக்குனர் திருநாவுக்கரசு சம்பந்தபட்ட வனச்சரகர் பணிபுரியும் மாவட்ட வன அதிகாரிக்கு தெரிவித்து பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கோயம்புத்தூர் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் ரேஞ்சர் ஆரோக்கியசாமியை பணியிடைநீக்கம் செய்துள்ளார்.வனச்சரக அதிகாரியின் மனைவியின் தோப்பில் இருந்த சந்தன மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.