ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைசெய்தனர். அதில் ஆவணம் இல்லாமல் கணக்கில் வராத 39 ஆயிரம்பணத்தை பறிமுதல் செய்தனர்.;
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு துறை அலுவலகங்களில் அதிக அளவு லஞ்சம் பெறப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் சோதனை செய்து வந்தனர்.கடந்த வாரம் விருதுநகர் போக்குவரத்து துறை ஆய்வாளர் இடமிருந்து கணக்கில் வராத நகை மற்றும் பணத்தை கைப்பற்றினர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து பில்களை பாஸ் செய்வதற்காக பணம் கை மாறுகிறது என்று விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அப்பகுதியில் மாறுவேடத்தில் நோட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது நடத்திய சோதனையில் அலுவலகத்தில் முன்னாள் உதவியாளராக வேலை பார்த்த அழகு முத்து என்பவரிடமிருந்து ரூபாய் 27 ஆயிரம் மற்றும் அலுவலகத்திற்கு வந்திருந்த ஒப்பந்தகாரர் இடமிருந்து ரூபாய் 12 ஆயிரம் 39 மொத்தம் 39 ஆயிரத்தை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் சம்பந்தபட்ட கேள்விகளுக்கு இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
அதன் பின்னர் அவர்களிடமிருந்து அப்பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோ மற்றும் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சிவகாமி மற்றும் உதவி பொறியாளர் மகேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.மேற்படி இருவரிடம் இருந்து எவ்வித பணமும் கைப்பற்றப்படவில்லை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உயரதிகாரிகள் உத்தரவிடும் பட்சத்தில் மேற்படி இரண்டு அதிகாரிகளின் வீட்டில் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.