விருதுநகரில் ஆசிரியை வீட்டில் 50 பவுன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் வையாபுரி தெருவை சேர்ந்தவர் சுதாதேவி (41). இவர் தன் மகனுடன் வசித்து வருகிறார். விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 28ம் தேதி குடும்பத்துடன் மதுரை சென்றிருந்தனர். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டிலுள்ள பீரோவை திறந்து பீரோவில் வைத்திருந்த சுமார் 50 பவுன் நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கு சுதாதேவி தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து வீட்டிற்கு சென்ற போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.