திருச்சியில் தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்கினார் எடப்பாடி பழனிச்சாமி

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் பிரச்சார பயணம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி வந்தார். தொட்டியம் பகுதியில் முதல்கட்ட பிரசாரத்தை துவக்கினார்.;

Update: 2020-12-30 10:09 GMT

திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பிரச்சார பயணமாக திருச்சி வருகை தந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொட்டியம் பகுதியில் முதல்கட்ட பிரசாரத்தை துவங்கினார்

தொட்டியம் வானப்பட்டரை மைதானத்தில் பொதுமக்களிடம் அவர் பேசியதாவது,

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வர வாக்களியுங்கள் இரட்டை இலை. இருபெரும் நம் தலைவர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிறப்பாக பணி செய்து சென்றுள்ளனர்.

ஏழை எளிய மாணவ மாணவிகள் முன்னேற எத்தனையோ நல்ல பல திட்டங்களை கொடுத்து மாணவர்கள் முன்னேற வழி வகை செய்தவர் ஜெயலலிதா. 52 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. அண்ணா திமுகவை உடைபார்களாம் - உன்னால் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்க முடியாது. ஆட்சியை கவிழ்க்க எத்தனையோ திட்டம் போட்டீர்கள். உன் கட்சியை காப்பாற்றி கொள், ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் இந்த கழகத்தை தொட்டு கூட பார்க்க முடியாது.

1989ல் நீங்கள் நுழைந்த அதே வருடத்தில் நானும் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்று உள்ளே வந்தேன். நீங்கள் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு.

உங்க அப்பா வழியில் நீங்கள் வந்தவர் ஸ்டாலின், உனக்கே இவ்வளவு வழுவு இருந்தால் எனக்கு எவ்வளவு வழுவு இருக்கும். நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். திமுக காரனுக்கும் தலைவனுக்கும் அது இல்லை. நல்ல எண்ணம் தொண்டனுக்கும் இல்லை. டெண்டரை ரத்து செய்து ஒன்றறை ஆண்டு ஆகிறது, அது கூட தெரியாமல் அதையும் சேர்த்து கொண்டு போய் ஆளுநரிடம் லிஸ்டாக கொடுக்கிறார் ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தலில் நீ வெற்றி பெறலாம், ஆனால் சட்ட மன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெற முடியாது. உச்சநீதிமன்றம் நாடினோம், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டோம். வரலாற்று சின்னத்தை மறக்க முடியுமா ? நாட்டு மக்களை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே ஆவோம். 75 ஆயிரம் கோடி மதிப்பில் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் எத்தனையோ ஏரிகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது, அரசு கொள் முதல் நிலையங்களில் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு நாங்கள் கொள் முதல் செய்துள்ளோம். 313 அரசு பள்ளி மாணவர்கள் இன்று எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் - 5 லட்சம் முதியோர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்படுகிறது. 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்து உள்ளேன், பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று தனது பிரசாரத்தில் முதலமைச்சர் பேசினார்.

இந்தப் பிரசாரத்தின் போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிற்படுத்தப்பட்டடோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராசு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: