தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குடிநீர் பிடிக்க சென்ற பொழுது அரசு பேருந்தி மோதி பெண் பலியானார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பாப்பாகால் அருகே அம்பேத்கர் காலனி தெருவில் வசிப்பவர் வடிவு. இவர் சம்பவத்தன்று தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியே வந்த அரசுப்பேருந்து வடிவு மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, அரசு மருத்துவமனை அருகில் பாப்பான் கால்வாயில் பழைய பாலத்தை விரிவாக்கம் செய்து தேசிய நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்திற்கு 20 மீட்டர் அகலத்தில் இரு புறமும் விரிவாக்கும் பணி கடந்த 3 மாதமாக நடைபெற்று வந்தது.
தற்போது சாலைகளின் இரு புறமும் விரிவாக்கப் பணி நடைபெறாததால் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மாலை நேரத்தில் அதிக அளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் அம்பேத்கர் காலனி தெருவில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் பிடிக்க பொது நல்லி உடனடியாக வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.