நீலகிரி மாவட்டத்தில் உதகை , குன்னூர் , நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி சிறப்பு ஒத்திகை முகாம் இன்று நீலகிரி சுகாதார மாவட்டத்தில் உதகை, குன்னூர் , நெலாக்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. ஒவ்வொரு தடுப்பூசி மையங்களிலும் 25 நபர்கள் வீதம் 75 நபர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முகாமை துவக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்கள் , முன்கள பணியாளர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 வயதுக்குள் தொற்றாநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், தடுப்பூசி திட்டம் செயல்படுத்தும் போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் நோக்கமாக உள்ளது.கொரோனா தடுப்பூசி வழங்க நீலகிரி மாவட்டத்தில் 823 தடுப்பூசி வழங்கும் மையங்கள் சுமார் 1,232 தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் பட்டியலிடப்பட்டு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.