கூடங்குளம் இரண்டாவது அணு உலை- தொழில் நுட்பக் கோளாறு-மின்உற்பத்தி நிறுத்தம்.
கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். .
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இரு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இரு உலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம் பவர் கிரீட் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
முதல் அணு உலையில், தரம் குறைந்த உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கேற்ப அந்த உலையானது அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில்,இரண்டாவது அணு உலையில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. அணு உலையின் வால்வில் பழுது ஏற்பட்டதால் செயல்பாட்டை நிறுத்தி வைத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலையில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணியில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்..