சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து பிடிபட்டு வரும் முதலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புரவி புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் அடித்து வரப்பட்டன. அவை தற்போது கிளை வாய்க்கால்களில் சுற்றித்திரியும் போது, வனத்துறையினரால் பிடிபட்டு வருகின்றன.
கடந்த வாரம் ஒரு முதலை பிடிபட்ட நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் கரை ஒதுங்கியுள்ளது. அதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், முதலை இருப்பதாக சீர்காழி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் வனசரக அலுவலர் குமரேசன் தலைமையில் அனுமந்தபுரம் பகுதியில் சென்று முதலையை வலை வைத்து பிடித்துள்ளனர். பிடிபட்ட 7 அடி நீளமுதலைக்கு இரண்டு வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் பாதுகாப்பான முறையில் கொண்டு சென்று கொள்ளிடம் அணைக்கரை ஆற்றில், முதலை விடப்பட்டது. தொடர்ந்து பிடிபட்டு வரும் முதலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.